இன்று ஸ்டாலின் அமைச்சரவைப் பட்டியல் வெளியீடு - உதயநிதிக்கு இடம் கிடைக்குமா?
கடந்த ஏப்ரல் 6ம் தேதி தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 2ம் தேதி நடைபெற்றது. இதில் 159 தொகுதிகளை கைப்பற்றி திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்திருக்கிறது.
இதனையடுத்து நாளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் மாளிகையில் தமிழக முதல்வராக பதவியேற்க இருக்கிறார். கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு 200 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சி அமைப்பது அரசியல் ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. 50 ஆண்டுகால அரசியல் போராட்டத்திற்கு பிறகு, ஸ்டாலின் ஆட்சிக் கட்டிலில் அமர உள்ளார்.
மு.க.ஸ்டாலின் பதவியேற்கும் நிலையில், தனது அமைச்சரவையில் ஸ்டாலின் யார் யாரை அமர்த்தப் போகிறார் என்பது தான் மக்களிடையே எதிர்பார்ப்பாக உள்ளது. திமுகவில் மூத்த தலைவர்கள் பலர் இருப்பதால், யாருக்கு வாய்ப்பு கொடுக்கப்படும்? யாருக்கு வாய்ப்பு நிராகரிக்கப்படும்? என்ற பேச்சு வெகுவாக எழுந்துள்ளது.

திமுகவில் அனுபவம் பெற்ற தலைவர்கள் பலர் இருக்கும் நிலையில், புதிதாக அரசியலுக்கு வந்திருக்கும் உதயநிதிக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இன்று மதியம் ஸ்டாலினின் அமைச்சரவைப் பட்டியல் வெளியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் உதயநிதிக்கு இடம் வழங்கப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.