மேற்கு வங்கத்தில் நடந்த வன்முறை - சென்னையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!
மேற்கு வங்கத்தில் நடந்த வன்முறையை கண்டித்து சென்னையில் எல்.முருகன் தலைமையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று, முடிவுகள் வெளியாகின. இத்தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. இதனால், அங்கு வன்முறை வெடித்துள்ளது.
இந்த வன்முறைகளில் இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. பாஜகவைச் சேர்ந்த தொண்டர்கள் 6 பேர் இந்த வன்முறையில் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் 5 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டன. சில இடங்களில் பாஜக அலுவலகங்களும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.
தங்கள் தொண்டர்கள் குறி வைத்து தாக்கப்படுவதாகவும், எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பாஜக மாநில தலைவர் திலிப் கோஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற வன்முறையை கண்டித்து, சென்னையில் எல்.முருகன் தலைமையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மம்தா பானர்ஜிக்கு எதிராக பாஜகவினர் கோஷங்களை எழுப்பினர். அதனைத் தொடர்ந்து மாநில தலைவர் எல்.முருகன் வன்முறையை கண்டித்து உரையாற்றினார்.
