தினக்கூலி பணியாளரின் மனைவி தேர்தலில் வெற்றி - ஏழைமக்களின் வெற்றியாக கிராமமே கொண்டாட்டம்!
மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சல்டோரா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட தினக்கூலி பணியாளரின் மனைவி சந்தனா பவுரி வெற்றி பெற்றதை அக்கிராம மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர்.
மேற்கு வங்கம், சல்டோரா தொகுதியைச் சேர்ந்தவர் சந்தனா பவுரி. இவரது கணவர் ஒரு தினக்கூலி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கணவர் சம்பாதிக்கும் சிறு தொகையில்தான், சந்தனா பவுரியும் அவரது மூன்று குழந்தையும் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், சந்தனா பவுரி சல்ரோரா தொகுதியில் பாஜக சார்பில் இத்தேர்தலில் போட்டியிட்டார். இவருக்கு எதிராகப் போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான சந்தோஷ் குமார் மொந்தலை 4,145 வாக்குகள் வாக்கு வித்தியாசத்தில் இவர் தோற்கடித்தார்.
இவர் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்யும்போது, இவரது சொத்து மதிப்பு தகவல்கள் நம்மையே அதிர்ச்சி அடையச் செய்து விடும். இவரின் சொத்து மதிப்பு ரூ31,985 மட்டுமே. மேலும் இவருக்கு மூன்று ஆடுகள் உள்ளன. இவர்கள் மண்வீட்டில்தான் வாழ்ந்து வருகின்றனர்.
2014ம் ஆண்டு முதல் அரசியலில் சந்தனா பவுரி ஈடுபட்டு வருகிறார். 2018 மற்றும் 2019ம் ஆண்டில் கிராம பஞ்சாயத்துத் தலைவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது சட்டமன்றத் தேர்தலில் இவரின் வெற்றி ஏழைமக்களின் வெற்றியாக தொகுதி மக்கள் கொண்டாடி வருகின்றனர்.