விராலிமலை தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர் வெற்றி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
விராலிமலை சட்டமன்ற தொகுதியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று (மே 2) காலை 8 மணியிலிருந்து தொடங்கி நடைபெற்றது. இதில், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகளில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், திமுக வேட்பாளர் தென்னலூர் பழனியப்பன் இடையயே கடும் போட்டி நிலவியது.
இதனையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் குறிப்பிட்டிருந்த எண்ணுக்கும், ஆவணங்களில் குறிப்பிட்டிருந்த எண்ணுக்கும் மாறுபாடு இருந்ததால் எதிர்க்கட்சி வேட்பாளர்கள், முகவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், பல முறை வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, 23 சுற்றுகளின் முடிவில் அமைச்சர் விஜயபாஸ்கர், திமுக வேட்பாளரை விட 19,044 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார். எனினும் வெற்றி பெற்றவர்களை அறிவிப்பதில் இன்று காலை வரை தாமதம் நீடித்தது. தேர்தல் முடிவுகளை விரைந்து அறிவிக்க வேண்டுமென அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தினார்.
இந்நிலையில், விஜயபாஸ்கர், திமுக வேட்பாளர் பழனியப்பனை விட 23 ஆயிரத்து 644 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றிவாகை சூடியுள்ளார். இந்த வெற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.