கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று தாயாரிடம் ஆசி பெற்ற மு.க.ஸ்டாலின்!
தமிழகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் அமோக வெற்றி அடைந்துள்ளதால் தமிழக மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர். ஆளும் கட்சியான அதிமுகவை வீழ்த்தி திமுக அரியணை ஏற உள்ளது தொண்டர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.
திமுகவின் முக்கிய புள்ளிகள் எல்லோரும் அவரவர் போட்டியிட்ட இடங்களில் வெற்றி வாகையை சூடியுள்ளனர். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.
அதிமுக தான் ஜெயிக்கும் என்று சொல்லப்பட்ட தொகுதிகளில் எல்லாம் திமுக வெற்றிக் கொடியை நாட்டியது. நேற்றைய தினம் (மே 2) திமுக வரலாற்றில் முக்கிய நாளாக பார்க்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழகத்தில் உதயசூரியன் உதயமானதால் தொண்டர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர்.

முதல்முறையாக முதல்வர் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றியை ருசித்த மு.க.ஸ்டாலினுக்கு நாட்டின் பல்வேறு மூலைகளில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில், முதல்வராக பதவியேற்கவிருக்கும் மு.க.ஸ்டாலின் சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனது இல்லத்துக்கு சென்று தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார். பின்னர், அங்கிருந்து சென்னை அண்ணா அறிவாலயம் சென்ற அவருக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.