27,000 வாக்குகள் வித்தியாசம்: மாஸ் காட்டும் எடப்பாடி பழனிசாமி
தமிழக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி, 27,000 வாக்குகள் அதிகம் பெற்று முன்னணியில் இருக்கிறார். தமிழக வேட்பாளர்களில் இவரே அதிக வாக்குகள் எண்ணிக்கையில் முன்னிலையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஓபிஎஸ் முதல்வராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர், அவர் விலகி சசிகலா தேர்வு செய்யப்படலாம் என்கிற நிலையில், அவர் திடீரென்று சிறைக்குச் சென்றார். அதனையடுத்து, யாரும் எதிர்பார்க்காதபோது தமிழகத்திற்கு முதல்வரானார் எடப்பாடி பழனிசாமி. அதன் பின்னர் தனது இடத்தை 4 ஆண்டுகளில் வலுவாகத் தக்கவைத்துக் கொண்டார்.
முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவதில் பல இடர்ப்பாடுகளை அவர் சந்திக்க நேர்ந்தது. இருந்தாலும் விடாமுயற்சியோடு முதல்வர் வேட்பாளராகக் களம் கண்டார். தேர்தல் பிரச்சாரக் களத்தில் எடப்பாடி- ஸ்டாலினுக்கு மட்டுமே போட்டி என்ற அளவிற்கு பிரச்சாரத்தில் தன்னை வலுவாக நிரூபித்துக் கொண்டார்.

அவரவர் சொந்தத் தொகுதியில் முடங்க, எடப்பாடி பழனிசாமி சொந்தத் தொகுதியான எடப்பாடி போகாமல் அனைத்துத் தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொண்டார். சில நாட்கள் மட்டுமே பிரச்சாரம் செய்தாலும் மண்ணின் மைந்தனான எடப்பாடி பழனிசாமியின் வெற்றி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.
எட்டிப்பிடிக்க முடியாத எட்டாத தூரத்துக்குச் சென்றிருக்கிறார் அவர். தற்போது அவர் திமுக வேட்பாளரைவிட 27,000க்கும் மேற்பட்ட வாக்குகளை அதிகம் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.