அண்ணா அறிவாலயத்தில் பட்டாசு வெடித்து திமுக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்!
தமிழகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் கடந்த மாதம் 6ம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
வாக்கு எண்ணிக்கையில் தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி பெரும்பான்மையான இடத்தை பிடித்து முன்னிலை வகித்து வருகிறது. இதனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி திமுக ஆட்சி அமைக்கும் சூழல் தற்போது உருவாகி வருகிறது. இதனையடுத்து, திமுகவினர் சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திரண்டு, பட்டாசு வெடித்து வெற்றியை மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர்.தொண்டர்கள் ஆட்டம், பாட்டத்துடன், இனிப்புகளை வழங்கியும் வெற்றியை கொண்டாடுகின்றனர்.
கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருவதால் தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி தான் தேர்தல் ஆணையம் இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது. பட்டாசு வெடிக்க கூடாது, ஊர்வலமாக செல்லக்கூடாது, இனிப்பு வழங்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் விதித்துள்ள தடைகளை மீறி திமுகவினர் அண்ணா அறிவாலயத்தில் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

திமுக தலைவரும் கூட, வீட்டுக்குள் இருந்தே வாக்கு எண்ணிக்கையை கவனியுங்கள். வெற்றி கொண்டாட்டத்தை தவிர்த்து விடுங்கள் என்று தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இருந்தாலும், 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகி வருவதால் இந்த மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் திமுகவினர் வெற்றியை ஆட்டம், பாட்டத்துடன் ‘ஸ்டாலின்தான் வாராரு…விடியல் தரப்போறாரு..’ என்று கொண்டாடி வருகின்றனர்.