அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்

politics
By Nandhini Apr 30, 2021 12:49 PM GMT
Report

கருத்துக் கணிப்புகள் எதுவும் எடுபடாது என்றும் அதிமுக கூட்டணிதான் பெருபான்மையாக வெற்றி பெறும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் மே 2ம் தேதி சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்கிடையே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் நேற்று வெளியாகியிருந்தன. இதில் திமுக கூட்டணிக்கு அதிக இடங்கள் பெற்று வெற்றி பெறும் என்று கூறப்பட்டிருந்தது.

இதனையடுத்து, இன்று சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது -

வரும் மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு, பொதுமக்கள் மகிழ்ச்சி அடையும் வகையில், அதிமுக மீண்டும் ஆட்சியை அமைக்கும். அதிமுக தொண்டர்கள் அனைவரும் வாக்கு எண்ணப்படும் நேரத்தில் உற்சாகத்தோடு இருக்க வேண்டும்.

தபால் வாக்குகளில் கடந்த காலங்களில் என்ன நடைமுறை பின்பற்றப்பட்டதோ, அதே நடைமுறை இப்போதும் பின்பற்ற வேண்டும். தபால் வாக்குகளை முதலில் தான் எண்ண வேண்டும். தேர்தல் ஆணையம் விருப்பு வெறுப்பின்றி செயல்பட வேண்டும். சுமூகமான முறையில் வாக்கு எண்ணிக்கையை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினார்.