உற்பத்தியாகும் ஆக்சிஜனை அடுத்த மாநிலத்திற்கு தர மாட்டோம் என்பது மட்டமான பேச்சு- எஸ்.ஆர்.சேகர்

politics
By Nandhini Apr 26, 2021 08:40 AM GMT
Report

உற்பத்தியாகும் ஆக்சிஜனை அடுத்த மாநிலத்திற்கு தர மாட்டோம் என்று கூறுவது மட்டமானப் பேச்சு என்று தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் விமர்சனம் செய்துள்ளார். 

இந்தியாவில் கொரோனாவின் 2ம் அலை அதிகமாக பரவி வருகிறது. இதனால், ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு மத்திய அரசு ஆக்சிஜன் அனுப்பியது மிகுந்த வருத்தம் அளிப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கருத்துத் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, ஸ்ரீபெரும்புதூர் ஆலையிலிருந்து பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்புவதை ரத்து செய்ய வேண்டும். வேறு மாநிலங்களுக்கு ஆக்சிஜனை எடுத்துச் சென்றால் தமிழகத்திற்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் என்று பிரதமருக்குத் தமிழக முதல்வர் கடிதம் எழுதியிருந்தார்.

இதுகுறித்து, தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் டுவிட்டரில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்த பதிவில், பாரதம் ஒருங்கிணைந்த நாடு, பூகம்பமோ, புயலோ, வெள்ளச்சேதமோ எதுவாயினும் நாடே ஒன்றிணைந்து மீட்டு பணிகளில் ஈடுபடும். துயருற்ற மக்களுக்கு உதவி புரிவர். எங்கள் மாநிலத்தில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை அடுத்த மாநிலத்திற்கு தர மாட்டோம் என்பது மட்டமான பேச்சு.

மேலும், நிர்வாக ரீதிக்காக தான் மாநிலங்கள் பிரிக்கப்படனவே தவிர பிரிவினையை வளர்க்க அல்ல. தேச விடுதலைக்காக அதிக மக்களை ஈடுபடுத்திய மாநிலம் தமிழகம். இங்கு இத்தகைய நச்சு பேச்சுக்கள் பிரிவினையை ஊக்குவிக்கும். அதிலும் அரசே இப்படி பேசுவது வருத்தமளிக்கிறது.

மக்கள் நலன் என்ற பெயரில் விஷ கருத்துக்களை விதைத்து கீழ்தரமாக அரசியல் செய்யும் கட்சிகளை தேர்தல் ஆணையம் தடை செய்ய வேண்டும். ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிப்பவர்களுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் அளிக்கக்கூடாது என்று பதிவிட்டுள்ளார்.