ஸ்டெர்லைட் ஆலையில் 4 மாதங்கள் மட்டும் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி- முதல்வர் பழனிச்சாமி

politics
By Nandhini Apr 26, 2021 06:32 AM GMT
Report

ஸ்டெர்லைட் ஆலைக்கு 4 மாதங்களுக்கு மட்டும் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கப்படுகிறது என்று முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்து வருவதால், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இலவசமாக ஆக்சிஜன் தயாரித்து தருவதாக நீதிமன்றத்தில் அனுமதி கேட்டுள்ளது. இதற்கு தூத்துக்குடி மக்கள் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஸ்டெர்லைட் ஆலை திறக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதிக்கக்கூடாது என்று மாவட்ட ஆட்சியரிடம் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மனு அளித்து வருகிறார்கள். 

இந்நிலையில், ஆக்சிஜன் உற்பத்திச் செய்வதற்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம்; ஆக்சிஜன் உற்பத்தியைத் தவிர்த்து வேறு எந்தச் செயல்பாட்டுக்கும் அனுமதி வழங்கக் கூடாது என அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் திமுக கருத்து தெரிவித்திருக்கிறது. 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்கலாமா? என்பது குறித்து அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி பேசியதாவது -

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும் என்பது அரசின் நோக்கம் கிடையாது. ஏனென்றால், ஆலையை மூடியது தமிழக அரசு தான். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாட்டில் தற்போது ஆக்சிஜன் தேவை அதிகரித்திருக்கிறது. இதனால், ஸ்டெர்லைட் ஆலைக்கு 4 மாதங்களுக்கு மட்டும் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. உள்ளூர் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய குழு அமைத்து, ஆலையை கண்காணிக்க வேண்டும் என்று பேசினார்.