ஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும்- அண்ணாமலை
ஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
பழனி கோவிலில் பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் அண்ணாமலை சாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களின் சிகிச்சைக்காக ஆக்சிஜன் அதிக அளவில் தேவைப்படுகிறது. இதனை வெளிநாடுகளிலிருந்து பெறுவதைக் காட்டிலும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வது அவசியம். தற்போதுள்ள நிலையை கருத்தில் கொண்டு ஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது நல்லது.

ஆலையை திறந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று தமிழக அரசு கூறுவதை ஏற்க முடியாது. டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகமாவதற்கு மாநில அரசே காரணம். இதற்கு மத்திய அரசை குறை கூற வேண்டிய அவசியம் இல்லை. வாக்குப்பதிவு எந்திரம் கால்குலேட்டர் போன்றது. அதனை ஊருடுவி ஹேக் செய்ய முடியாது.
காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளும், இந்த எந்திரத்தில் நடந்த வாக்குப்பதிவு மூலம்தான் வெற்றி பெற்றது. தி.மு.க.வினர் கேபிள் டி.வி., டிஸ் மாட்டக்கூடாது என்று கூறுகின்றனர்.
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று சொல்வது போல அவர்கள் பேசுகின்றனர். அறிவியல் தெரியாத அரசியல்வாதிகளால்தான் இந்த நிலை ஏற்படுகிறது. தமிழகத்தில் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும். இதற்கு பா.ஜ.க. உறுதுணையாக இருக்கும் என்றார்.