அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சி- மக்கள் கூட்டம் முண்டியடித்தால் பரபரப்பு
விருதுநகரில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு கபசுர குடிநீர் கொடுத்த நிகழ்ச்சியில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றாமல் பொதுமக்கள் முண்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இந்த சூழ்நிலையில், அதிமுக கட்சி சார்பில் கொரோனா தொற்றைத் தடுக்க பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்க நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி, அதிமுக சார்பில் விருதுநகர் கந்த மாரியம்மன் கோவில் முன்பு, தமிழக பால் வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, பொதுமக்களுக்கு கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் கபசுர குடிநீர் வழங்கினார்.
மேலும், வெயிலுக்கு உகந்த தண்ணீர், பழங்கள் உள்ளிட்டவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில், கலந்து கொண்ட பலர் முகக்கவசம் அணியாமலும், முறையான சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், தண்ணீரையும், பழங்களை வாங்க முண்டியடித்தனர். இதனால் அங்கு கூட்டம் அலைமோதி நெரிசல் ஏற்பட்டது. இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தை பார்த்த சமூக ஆர்வாளர்கள், கொரோனாவை தடுக்க கபசுரக்குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நிகழ்ச்சியில் கொரோனா விதிமுறைகள் முறையாக பின்பற்றவில்லை என வருத்தம் தெரிவித்தனர்.