ஸ்டெர்லைட் விவகாரத்தில் மக்களின் கருத்தை அரசு அழுத்தமாக எடுத்துரைக்க வேண்டும்- எம்.பி. கனிமொழி
ஸ்டெர்லைட் விவகாரத்தில் மக்களின் கருத்தை அரசு அழுத்தமாக எடுத்துரைக்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி வலியுறுத்தியுள்ளார் .
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து, அனைவருக்கும் இலவசமாக கொடுக்க தயாராக இருக்கிறோம் என ஸ்டெர்லைட் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை அனுமதிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்க முடியாது என தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு தனது அதிருப்தியை வெளிப்படுத்திய நீதிபதிகள், ஆக்சிஜன் இன்றி மக்கள் இறந்து கொண்டிருக்கும் சூழலில் ஆலையை திறக்க கூடாது என தமிழக அரசு கூறுவது சரியா? என கேள்வி எழுப்பியதோடு ஆலையை அரசே ஏற்று நடத்தலாம் என்றும், எந்த நிறுவனம் என்பது முக்கியமல்ல, மக்களின் உயிர் தான் முக்கியம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதற்கு தமிழக அரசு தரப்பில், கடந்த 2018ம் ஆண்டு நடந்ததை போல மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடக்க விரும்பவில்லை என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டில் சம்பவம் நடந்தாலும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை இன்னமும் தொடர்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, ஆலையை திறப்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

இதற்கிடையில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஏன் அனுமதிக்கக் கூடாது என நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு அரசு உரிய பதிலளிக்க வேண்டுமென திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், இன்று உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு ஏன் செயல்படுத்தக்கூடாது என்று கேட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட சூழல், கேடுகளையும் மக்களின் அச்சங்களையும் எளிதில் புறந்தள்ள முடியாது. மக்களின் கருத்தை கேட்ட அரசு, அதனை நீதிமன்றத்தில் அழுத்தமாக எடுத்து வைக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.