வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா?- கே.என்.நேருவுக்கு முன்ஜாமீன்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6ம் தேதி நடைபெற்றது. அந்த சமயத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக அரசியல் பிரமுகர்கள் பலர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
அந்த வரிசையில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட அவர், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்தது. அதுமட்டுமில்லாமல் தனது ஆதரவாளர்களுடன் நேரு பேசிய வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் பரவி வைரலானதால் வசமாக மாட்டிக்கொண்டார் நேரு.
அந்த வீடியோவில், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டு விட்டதா என நேரு கேட்க, அறையில் இருப்பவர்கள் எதிர் தரப்பு ரூ.500 கொடுக்குறாங்க என்றனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் அளித்த புகாரின் பேரில், முசிறி காவல் நிலையத்தில் கே.என்.நேரு மீது வழக்கு பதிவானது.
இதனையடுத்து, முசிறி காவல் நிலையத்தில் பதிவான வழக்கு அரசியல் ஆதாயத்திற்காக போடப்பட்டது என புகாரளித்த கே.என்.நேரு முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தை நாடினார். அந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், நேருவுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.
