அதிமுக பொதுச் செயலாளர் பதவி விவகாரம் - சசிகலா வழக்கு திடீர் ஒத்திவைப்பு!

politics
By Nandhini Apr 23, 2021 12:27 PM GMT
Report

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பிற்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். சொத்துக்குவிப்பு முறைகேடு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதமும் விதித்து கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதையடுத்து, பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ர ஹாரா சிறையில் சசிகலா உள்ளிட்ட மூவரும் சரணடைந்தனர். 4 ஆண்டுகளில் சசிகலா இருமுறை பரோலில் வெளியே வந்துள்ளார். அவரின் தண்டனைக் காலம் ஜன.27-ம் தேதியுடன் நிறைவடைவதாக சிறைத்துறை அறிவித்தது.

இதையடுத்து சசிகலா தனக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை கடந்த நவம்பரில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் செலுத்தினார்.

சிறைத்தண்டனை முடித்து விடுதலையான சசிகலா சென்னை வந்து அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துவார் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் அரசியலை விட்டு விலகுவதாக திடீரென அறிவித்தார். கடந்த சில மாதங்களாக அவர் தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து வருகிறார்.

அதிமுக பொதுச் செயலாளர் பதவி விவகாரம் - சசிகலா வழக்கு திடீர் ஒத்திவைப்பு! | Politics

இந்நிலையில், சசிகலா சிறைக்கு சென்ற பிறகு கட்சியின் முழு பலத்தையும் கையிலெடுத்த ஈபிஎஸ்- ஓபிஎஸ், சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பொதுக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுத்த முடிவு செல்லாது என தீர்மானம் நிறைவேற்றினர். இதனையடுத்து, டிடிவி தினகரன் அதிமுகவில் இருந்து வெளியேறிவிட்டார். அதிமுகவின் இந்த நகர்வு சசிகலாவின் தலையில் பேரிடியாக விழுந்தது.

இந்நிலையில், அவர் நீதிமன்றத்தை நாடினார். அதிமுக பொதுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட 12 தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்கக்கோரி சசிகலாவும், டிடிவி தினகரனும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அதிமுகவிலிருந்து வெளியேறிய டிடிவி தினகரன், அமமுக என்ற புதிய கட்சியை தொடங்கியதால் இந்த வழக்கில் இருந்து விலகிவிட்டார். சசிகலா மட்டும், தனது பொதுச் செயலாளர் பதவியை மீட்டெடுக்க சட்டப் போராட்டத்தை தொடர்ந்துள்ளார். அரசியலிலிருந்து தன்னை விலக்கிக் கொண்ட பிறகும், இந்த வழக்கில் பின்வாங்க அவர் விரும்பவில்லை.

இந்நிலையில் சசிகலாவின் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஆனால், நீதிபதி விடுப்பில் இருந்த காரணத்தால் வழக்கு விசாரணையை ஜூன் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.