ஆக்சிஜன் பற்றாக்குறை: பிரதமர் மோடி உயர் அதிகாரிகளுடன் திடீர் ஆலோசனை
ஆக்சிஜன் பற்றாக்குறையை கையாள்வது குறித்து பிரதமர் மோடி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்தியாவில் கொரோனா தொற்று அசுர வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா பிடியில் மக்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். நிலைமையை சமாளிக்க முடியாமல் மத்திய அரசும், மாநில அரசும் திணறி வருகின்றன. தற்போது இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. போதிய ஆக்சிஜன் இல்லாததால் வட மாநிலங்களில் கொரோனா நோயாளிகள் கொத்துக் கொத்தாக உயிரிழந்து வருகின்றனர்.
ஒரு நாளைக்கு 7000 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால் ஆக்சிஜன் தேவையை அதிகப்படுத்த முக்கிய அதிகாரிகள், அமைச்சரவை செயலாளர்களிடம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவக் குழுவின் சார்பாக, ஆக்சிஜன் பற்றாக்குறைப் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்குள் தனியார் மற்றும் அரசு ஆலைகள் மூலம் 3,300 டன் ஆக்சிஜன் தயாரிக்கப்பட்டுள்ளது என்று ஆலோசனையின்போது தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த வாரங்களில் ஆக்சிஜன் தேவையை அதிகரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையை பற்றி உயர் அதிகாரிகள் பிரதமரிடம் எடுத்து கூறினர். மேலும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் உரிய நேரத்தில் விரைவாகக் கொண்டுச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ரயில்கள் மூலமாக ஆக்சிஜன் டேங்கர்கள் விரைவாக கொண்டு செல்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.