கொரோனா கட்டுப்பாடுகளுடன் மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை- சத்யபிரதா சாகு
தமிழகத்தில் கொரோனாவின் 2ம் அலை அதிதீவிரமாக பரவி வருவதுடன், ஒரே நாளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
கொரோனாவின் பிடியில் சினிமா நட்சத்திரங்கள், அரசியல் வாதிகள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் சிக்கித் தவித்து வருகின்றனர். சென்ற ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் இரு மடங்கு அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசுகளும் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இருந்த போதிலும் கட்டுக்கடங்காமல் கொரோனா பரவல் சென்றுக் கொண்டிருக்கிறது.
இதனால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை தற்போது ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, நேற்று முதல் இரவு நேர ஊரடங்கையும், ஞாயிறுதோறும் முழு நேர ஊரடங்கையும் தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த ஊரடங்கு ஏப்ரல் மாதம் 30ம் தேதிவரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், திடீர் ஊரடங்கு அறிவிப்பால் வாக்கு எண்ணிக்கை நடைபெறுமா? இல்லை, மே 2ம் தேதி அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? போன்ற கேள்விகள் எழுந்தன.
மே இரண்டாம் தேதி, கொரோனா கட்டுப்பாடுகளுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “மே 2ம் தேதி காலை 8.30 மணிக்கு தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படும்.
சிறிய தொகுதிகளில் 14 மேஜைகள் வைத்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும். பெரிய தொகுதிகளில் 30 மேஜைகள் வரை கொண்டு வாக்குகள் எண்ணப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல்துறை கண்காணிப்பில் மிக பாதுகாப்பாக இருக்கின்றன.
இதுவரை எந்த தவறும் நிகழவில்லை. அப்படி புகார் இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியாது. அது ஒரு கால்குலேட்டர் போலதான். வாக்கு எண்ணும் மையத்தில் கண்டெய்னர் வந்தது கழிப்பறை வசதிக்காக மட்டும் தான்” என்றார்.