மர்ம நபர்களின் நடமாட்டம்: கமல் பரபரப்பு புகார்
வாக்குப்பதிவு இயந்திரம் தனது உறுதித் தன்மையை இழந்துள்ளது என்றும், அது கண்டவர் கைகளில் நடமாடுகிறது என்றும் கமல் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவைச் சந்தித்து மனு கொடுத்தார். அதனையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது -
'வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமராக்கள் அடிக்கடி செயலிழந்து விடுகிறது. மர்ம கண்டெய்னர்கள் நள்ளிரவில் வளாகங்களுக்குள் நுழைவதும், லேப்டாப்களுடன் மர்ம நபர்கள் நடமாடுவதும் பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பியுள்ளன.
தேர்தல் முறையாக நடத்தப்பட்டு, முடிவுகள் நேர்மையாக அறிவிக்கப்படும் என்ற நம்பிக்கையை வாக்காளர்களுக்கும், வேட்பாளர்களுக்கும் ஏற்படுத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமையாகும். இதனால்தான் தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளோம். வாக்குப்பதிவு இயந்திரம் தனது உறுதித் தன்மையை இழந்துள்ளது. அது கண்டவர் கைகளில் நடமாடுகிறது. ஸ்கூட்டரில் வாக்குப் பதிவு இயந்திரம் கொண்டுச் செல்லப்படுகிறது.

இது முதல் முறையாக அல்ல, இதற்கு முன்பு பல தேர்தல்களில் நடைபெற்றுள்ளது. தேர்தல் ஆணையம் சரியாகச் செயல்படவில்லை என்பதுதான் எங்களின் புகார். இது வெறும் புகார் மட்டும் கிடையாது. என்ன சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும். எப்படி மேம்படுத்தலாம் என்பது குறித்த பரிந்துரைகளை அந்த மனுவில் தெரிவித்துள்ளோம்.
இவ்வாறு கமல் பேசினார்.