திமுக எம்.எல்.ஏ மோகன் விடுதலை - சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

By Nandhini Apr 20, 2021 08:09 AM GMT
Report

ரேஷன் பொருட்களின் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக எம்.எல்.ஏ. எம்.கே.மோகன் உள்ளிட்ட 5 பேரை சென்னை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு நியாய விலை கடைகளில் விற்கப்படும் பொருட்களின் விலையை தமிழக அரசு உயர்த்தியது. இதைக் கண்டித்து சென்னை அண்ணா நகர் பகுதியில் உள்ள அனைத்து ரேஷன் கடை முன்பும் திமுக தரப்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இதில், அண்ணாநகர் எம்.எல்.ஏ., எம்.கே.மோகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அரும்பாக்கம் போலீசார், சட்டவிரோதமாக ஒன்றுகூடுதல், அரசு ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் எம்.கே.மோகன், அதியமான், ஏ.எம்.வேலாயுதம், சந்திரபாபு, செல்வம் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

திமுக எம்.எல்.ஏ மோகன் விடுதலை - சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு | Politics

இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி. – எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆலிசியா, வழக்கிலிருந்து அண்ணா நகர் எம்.எல்.ஏ., எம்.கே.மோகன் உள்ளிட்ட 5 பேரையும் விடுதலை செய்வதாக உத்தரவிட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டம் நடத்தியது தொடர்பாக புகார் ஏதும் கொடுக்கப்படாததால் காவல்துறை புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அனைவரையும் விடுதலை செய்வதாக தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.