பிரதமர் மோடி உடனே பதவி விலக வேண்டும்: மம்தா பானர்ஜி கடும் சாடல்
இந்தியாவில் கொரோனா பரவல் அதிபயங்கரமாக பரவி வருவதற்கு பிரதமர் மோடியே காரணம் என்றும், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார்.
கொரோனா 2-வது அலையின் தாக்கம், நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடியை திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி கடுமையாக குற்றம் சாட்டியிருக்கிறார்.
மம்தா பானர்ஜி பேசியதாவது -
சொந்த நாட்டில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஆனால், தனது சொந்த செல்வாக்கை வளர்த்துக் கொள்வதற்காக பிரதமர் மோடி தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்து வருகிறார்.

கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகளவில் பரவுவதற்கு பிரதமர் மோடி தான் காரணம். இதற்கு அவர் பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். 2021-ம் ஆண்டின் நிர்வாக திட்டமிடலுக்கு பிரதமர் மோடி எதையும் செய்யவில்லை.
பா.ஜ.க.வால் குஜராத்தில் கூட கொரோனா வைரஸ் அதிகரிப்பை சமாளிக்க முடியவில்லை. நெருக்கடியான சூழலுக்கு ஒட்டுமொத்த நாட்டையும் பிரதமர் கொண்டு வந்துவிட்டார்.
இவ்வாறு பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் மம்தா.