அரக்கோணம் இரட்டைக் கொலை - திருமாவளவன் தான் தூண்டிவிட்டிருக்கிறார்- எல்.முருகன்
மதுரையில் நடைபெற்ற பிரச்சினையை திருமாவளவன் தான் தூண்டிவிட்டிருக்கிறார் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் குற்றம் சாட்டியிருக்கிறார்.
அம்பேத்கரின் 130- வது பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு பாஜக மாநில தலைவர் எல்.முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனையடுத்து சிலை முன்பாக பாஜகவினர் மீது தாக்குதல் நடத்திய விடுதலை சிறுத்தை கட்சியினரை கண்டித்தும், விசிகவை தடை செய்ய கோரியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விசிகவிற்கு எதிராகவும், காவல்துறையினருக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேசியதாவது -
எங்களை தவிர அம்பேத்கருக்கு பெருமை தரக்கூடிய உரிமை யாருக்கும் கிடையாது, அம்பேத்கர் பிறந்தநாளில் எங்களது ஆட்சியில் பொதுவிடுமுறை அளித்துள்ளோம், பொருளாதார தந்தை ஆன அம்பேத்கருக்கு பெருமை சேர்க்கும் வகையில் பீம் மொபைல் ஆஃப் அறிமுகம் செய்தோம். அம்பேத்கரின் புகழை எடுத்து சொல்வதில் பாஜகவினருக்கு நிகர் யாருமில்லை.
பாஜக ஆட்சியில் அம்பேத்கருக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்பட்டது. அம்பேத்கரை முழுமையாக கொண்டாடுவதற்கு உரிமை பாஜகவினருக்கு மட்டுமே உண்டு. மதுரையில் பாஜகவினர் மீது திட்டமிட்டு விசிக ரவுடிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர், விசிக ரவுடிகளை காவல்துறை கைது செய்ய வேண்டும். வடமாவட்டங்களில் விசிகவின் அரசியலை இழந்துவிட்டனர்.

விசிகவினர் பாஜகவில் இணைந்து வருகின்றனர். அரக்கோணம் சம்பவம் துரதிஷ்டவசமானது. இதனை பயன்படுத்தி திமுகவும், விசிகவும் சாதிய பிரச்சினையாக மாற்ற முயற்சி செய்கின்றனர், காவல்துறை விசிகவின் மீதான கண்காணிப்பை ஆராய்ந்து கட்சியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜகவினர் அமைதியானவர்கள். அதனால் தான் அடிக்கும்போது கூட அமைதியாக இருந்தோம்.
திருமாவளவன் அவர்களது கட்சியினரை கட்டுப்படுத்த வேண்டும். பாஜகவினரை அமைதியாக இருக்க கூறினோம். மதுரையில் நடைபெற்ற பிரச்சினையை திருமாவளவன் தான் தூண்டிவிட்டிருக்கிறார் என குற்றம் சாட்டினார்.