இவர்கள் மட்டும்தான் சமூக விரோதிகள் - தமிழிசை ஆவேசம்!
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி எல்லா மாநிலங்களிலும் தடுப்பூசி திருவிழா நடத்த வேண்டுகோள் விடுத்தார்.
இதனையடுத்து, எல்லா மாநிலங்களிலும் தடுப்பூசி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதுச்சேரில் தடுப்பூசி திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. புதுச்சேரியில் உள்ள கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில், ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார்.
அப்போது நிகழ்ச்சியில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், பலர் வாய்க்கும், கழுத்துக்கும் தான் மாஸ்க்கை போடுகிறார்கள். குறைவான நபர்கள் மட்டும்தான் சரியாக முறையில் மாஸ்க்கை அணிகிறார்கள். முதன் முதலில் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது கொரோனா வைரஸ் பற்றிய எந்த தகவலும் யாருக்குமே தெரியாது. மக்களைப் பாதுகாப்பதற்காக மட்டும்தான் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஒரு வருட காலமாக நாம் கொரோனாவுடனே வாழ்ந்து பழகிவிட்டோம்.

இந்நிலையில், கொரோனாவை நாம் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை நாம் அனைவருமே தெரிந்து வைத்துள்ளோம். அப்படி தெரிந்தும் முறையாக மாஸ்க் அணியாதவர்கள்தான் சமூக விரோதிகள். உணவு சாப்பிடும் நேரத்தை தவிர பிற நேரங்களில் கட்டாயம் நாம் மாஸ்க் அணிய வேண்டும். கொரோனா நோய் தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகும் பாதிப்பு உறுதியானால் பயப்பட வேண்டாம். சத்தான உணவை தினமும் சாப்பிடுங்கள். கொரோனாவிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் என்றார்.