பிறந்தது 2023 ஆண்டு புத்தாண்டு - 'வசந்த காலமாக அமையட்டும்' அரசியல் தலைவர்கள் வாழ்த்து
ஆங்கில புத்தாண்டையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி
உலகின் நிலையான அமைதி மற்றும்நல்லிணக்கத்துக்காக உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள ஜி20 தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள நமது தேசம், 2023-ம் ஆண்டில் நம்பிக்கையுடனும், அபரிமிதமான தைரியத்துடனும் நுழைகிறது. புத்தாண்டு நம் அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம், நல்லிணக்கம் மற்றும் வெற்றியைக் கொண்டு வரட்டும்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்
கொரோனா தொற்றினால் வல்லரசு நாடுகளே தடுமாறிக் கொண்டிருக்கிற இக்காலகட்டத்தில் வாழ்வாதாரம், பொருளாதாரத்தில் நம்நாடு முன்னேறிக் கொண்டிருக்கும் பெருமையை மேலும் அதிகரிப்பதாக இந்த ஆண்டு அமையட்டும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கடந்த ஆண்டு என்பது தமிழகத்தைப் பொறுத்தவரை, அனைத்து துறைகளிலும் வளர்ச்சியும் எழுச்சியும் கொண்ட ஆண்டாகவே அமைந்திருந்தது. தமிழகம் இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலமாகத் தகுதி பெற்றுள்ளது.
இது, திமுக அரசைச் சேர்ந்தவர்களின் உழைப்புக்கு கிடைத்த சான்றிதழ். 2023-ம் ஆண்டில் உங்கள் ஒவ்வொருத்தருடைய சமூக, பொருளாதார வளர்ச்சியையும் இன்னும் அதிகரிக்கும் ஆண்டாக அமைய, தொடர்ந்து பாடுபடுவோம்.
சமூகநீதி மண்ணாக, மதச்சார்பற்ற மாநிலமாக விளங்க தமிழக மக்கள் ஒத்துழைக்க வேண்டும். இன்றைய இளைய சமுதாயமானது படிப்பில் மட்டுமே கவனம்செலுத்தி உயரிய லட்சியங்களை அடைய கனவு காண வேண்டும்.
அந்த கனவை நனவாக்க உழைக்க வேண்டும். ‘நான் முதல்வன்'- என்ற என்னுடைய கனவுத் திட்டத்தின் நோக்கமே அதுதான். கடந்த ஆண்டைப் போலவே வருங்காலமும் வசந்த காலமாக அமையட்டும். புத்தாண்டே வருக. புது வாழ்வைத் தருக.
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி
அதிமுக ஆட்சியில் அனைவரும் எவ்வித இன்னலுக்கும் ஆளாகாமல் சிறப்புடன் வாழ்ந்து வந்ததை நினைவுகூர்கிறேன். புலரும் புத்தாண்டு, அனைவருக்கும் ஒரு இனிய சிறந்த தொடக்கமாக இருக்கட்டும்.
ஓ.பன்னீர்செல்வம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் நடைமுறைப்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் உட்பட அரசின் அனைத்து நலத்திட்டங்களின் பயன்களை உரியவர் அனைவரும் பெற்றிட வேண்டும் என்பதே இப்புத்தாண்டில் எனது விருப்பம்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
ஒருங்கிணைந்து ஓரணியில் திரண்டு 2024 பொதுத் தேர்தலில் மத்திய பாஜக அரசை அகற்றுவதற்கு வரும் புத்தாண்டு ஒரு தொடக்கமாக அமையட்டும்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
பிறக்கும் 2023-ம் ஆண்டு நம்பிக்கையூட்டும் ஆண்டாக அமையட்டும். மத்திய அரசின் மகத்தான திட்டங்கள், மாநிலத்தின் மூலை முடுக்கில் இருக்கும் கடைக்கோடி மனிதனுக்கும் கிடைக் கட்டும்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ
ஜனநாயகத்தின் அடித்தளத்தையே தகர்த்திட முயற்சிக்கும் இந்துத்துவா சக்திகள் போன்றவற்றை எதிர்த்துப் போராடுவோர், மாநில சுயாட்சியைக் காக்கவும், மத்திய அரசின் அநீதியான போக்கைத் தடுக்கவும் ஆங்கிலப் புத்தாண்டு நாளில் சபதம் ஏற்போம்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன்
அனைவரும் கூடி வாழும் நல்லிணக்க சூழலை உருவாக்க ஜனநாயக இடதுசாரி, மதச்சார்பற்ற,மனிதநேய சக்திகள் ஒருங்கிணைந்து பணியாற்றுவதில் வெற்றிபெறும் ஆண்டாக 2023-ம் ஆண்டை அமைத்துக் கொள்ள அனைவரும் ஒன்றுபடுவோம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
மக்கள் ஒற்றுமை, மத நல்லிணக்கம், மதச்சார்பின்மை, இறையாண்மை, கூட்டாட்சி, ஜனநாயகம் ஆகியவற்றை பாதுகாப்பதற்கு முன்னேறிச் செல்லும் ஆண்டாக 2023-ம் ஆண்டு அமையட்டும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்
உருமாறிய கொரோனாவும், பொருளாதார மந்த நிலையும் நம்மை மிரட்டிக் கொண்டிருக்கின்றன. கடந்த காலங்களில் எத்தனையோ நெருக்கடிகளை சந்தித்த நாம், இந்த நெருக்கடியிலிருந்தும் மீண்டு வருவோம்.
விசிக தலைவர் திருமாவளவன்
சனாதான சக்திகளை தனிமைப்படுத்த புத்தாண்டு நாளில் உறுதியேற்போம்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்
விவசாயத் தொழில் மேம்படுவதற்கான, விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கான புத்தாண்டாக இப்புத்தாண்டு பிறக்க வேண்டும்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி
உதிக்கும் புத்தாண்டுபுத்தாக்கத்தைப் புது வெள்ளமெனப் பாய்ச்சும் பொதுநலப் பாதுகாப்பு ஆண்டாகப் பொலிவு தரும் என்று நம்புவோம்.
பாமக தலைவர் அன்புமணி: தமிழகத்தின் நலன்கள், உரிமைகள் ஆகியவற்றின் மீது படிந்த இருள் விலகி, ஒளி பிறக்க புத்தாண்டு வகை செய்யட்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.