குழந்தையின் சிரிப்பை பார்த்ததும் 4 நாள் களைப்பு பறந்து போனது - வைரல் காவலர் நெகிழ்ச்சி பேட்டி!
சென்னை மழை வெள்ளத்தில் குழந்தையை மகிழ்ச்சியுடன் மீட்டு வந்த காவலர் தயாளன் பேட்டியளித்துள்ளார்.
வைரல் காவலர்
மிக்ஜாம் புயலால் பெய்த கனமழை காரணமாக சென்னை நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது கனமழை ஓய்ந்துள்ளதால் சில இடங்களில் தேங்கியிருந்த மழை நீர் வடிந்து வருகிறது. ஆனால் சில இடங்களில் மழை நீர் வடியாமல் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும், தொடர்ந்து 4வது நாளாக மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில் துரைப்பாக்கம் விபிஜி அவென்யூ பகுதியில் வெள்ளத்தில் சிக்கியவர்களை காவல்துறையினர் பாதுகாப்பாக மீட்டனர். அப்போது காவலர் ஒருவர் கைக்குழந்தையை கையில் கட்டியணைத்து சிரித்தபடியே மீட்டு வந்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் அவரை வெகுவாக பாராட்டினார்.
பேட்டி
இந்நிலையில் தயாளன் என்ற அந்த வைரல் தலைமை காவலர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது "துரைப்பாக்கம் விபிஜி அவென்யூவில் 500க்கும் மேற்பட்டோரை மீட்டோம். அப்போது கைக் குழந்தையுடன் வந்த ஒரு குடும்பத்தினரை பாதுகாப்பாக அழைத்து வந்தேன்.
சீருடையில் இருந்ததால் குழந்தை உங்களை பார்த்து குழந்தை பயப்பட போகிறது என குழந்தையின் அம்மா கூறினார். பாதுகாப்பாக வர வேண்டும் என்பதற்காக குழந்தையை வாங்கிக் கொண்டு தண்ணீரில் நடந்து வந்தேன். அப்போது, குழந்தை என்னைப் பார்த்து சிரித்ததால், நானும் குழந்தையைப் பார்த்து சிரித்தேன். குழந்தையின் சிரிப்பை பார்த்தவுடன் 4 நாட்களாக தொடர்ந்து பணியாற்றிய களைப்பு பறந்து போய்விட்டது" என காவலர் தயாளன் மகிழ்ச்சியுடன் கூறினார்.
மேலும் பேசிய அவர் "யதார்த்தமாக நடந்த இந்த நிகழ்வின் போது எடுத்த படம் வைரலாகும் என நினைத்துப் பார்க்கவில்லை. சென்னை மாநகர ஆணையரும், டிஜிபி அலுவலகத்தில் இருந்தும் உயர் அதிகாரிகள் தொலைபேசியில் அழைத்து என்னை பாராட்டியது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது" என காவலர் தயாளன் கூறினார்.