பதினெட்டாம்படியில் போட்டோஷூட்.. காவலர்கள் மீது பாய்ந்த நடவடிக்கை - கேரளாவில் பதற்றம்!
பதினெட்டாம்படியில் போட்டோஷூட் நடத்திய காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போட்டோஷூட்
கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் மிகவும் புகழ் பெற்றது. தற்போது கார்த்திகை மாதம் என்பதால் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது.
இந்த கோவிலுக்கு இந்தியா முடிவதிலுமிருந்து மண்டல பூஜை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலையணிந்து, விரதமிருந்து பயபக்தியுடன் வழிபடுவார்கள். அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சபரிமலை ஐயப்பன் கோயிலில் 30 காவலர்கள் பக்தர்களைப் படியில் ஏற உதவும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
காவலர்கள்
அதன்படி, ஞாயிற்றுக்கிழமை பகல் 1.30 மணிக்கு ஒரு குழு தங்கள் பணியை முடித்துவிட்டு, அடுத்த குழுவினருக்கு பணியை ஒப்படைக்கும் முன்பு, 18 படிகளில் நின்று காவலர்கள் 30 பேர் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து பதினெட்டாம்படியில் போட்டோஷூட் நடத்திய 30 காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களை நன்னடத்தை பயிற்சிக்கு அனுப்பவும் கேரள காவல்துறை முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.