பள்ளி வாகனம் மோதி 2-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு - தாளாளர், வேன் ஓட்டுநர் உட்பட 4 பேர் மீது வழக்கு
பள்ளி வாகனம் மோதி 2-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகர் பகுதியில் வெங்கடேஸ்வரா என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் தீஷித் என்ற மாணவர் இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், தீஷித் இன்று வழக்கம் போல் பள்ளிக்கு வேனில் சென்றுள்ளார்.
பள்ளிக்கு சென்ற பின் வேனில் இருந்து இறங்கி வகுப்பறைக்குள் சென்ற சிறுவன் வேனில் ஒரு பொருளை மறந்து வைத்து விட்டதால் அதை எடுக்க மீண்டும் வேனுக்கு சென்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது.
பள்ளி வளாகத்தில் நின்று கொண்டிருந்த மாணவன் தீஷித் மீது பின்னோக்கி வந்த வேன் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மாணவர் தீஷித் பள்ளி வளாகத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்து குறித்து வாகன ஓட்டுநர் பூங்காவனத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை மாவட்ட கல்வி அதிகாரி மார்க்ஸ் பள்ளியில் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் பள்ளி வாகனம் மோதியதில் 2-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் குறித்து மாவட்ட கல்வி அலுவலர் அறிக்கை அளிக்க மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது, காவல்துறையினர் பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, தாளாளர் ஜெயசுபாஷ், முதல்வர் தனலட்சுமி, மாணவர்களை வேனிலிருந்து இறக்கிவிடும் ஊழியர் ஞானசக்தி ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதில் ஊழியர் ஞானசக்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் விபத்து குறித்து தனியார் பள்ளிக்கு முதன்மை கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மேலும், அடுத்த 24 மணி நேரத்துக்குள் 6 கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.