கைது செய்யப்படுகிறாரா சீமான்? - வீட்டில் அடுத்தடுத்து குவிந்த போலீசார்
சீமான் நேரில் ஆஜராக சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
சீமான் சர்ச்சை பேச்சு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த ஒரு மாத காலமாக பெரியார் ஈ.வெ.ராமசாமி குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி வந்தார்.
அவரின் பேச்சுக்கு பெரியாரிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தோடு, சீமான் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சம்மன்
அதனை தொடர்ந்து ஈரோடு கிழக்கு இடைதேர்தல் பிரச்சாரத்தின் போதும் கடும் விமர்சனத்தை வைத்ததோடு, "உன் பெரியாரிடம் வெங்காயம் தான் உள்ளது. நான் வெடிகுண்டு வைத்திருக்கிறேன். அந்த வெடிகுண்டு வீசினால் உன்னை புதைத்த இடத்தில் புல் கூட முளைக்காது" என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
இது தொடர்பாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள காவல்நிலையங்களில் 70க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராக சீமானுக்கு சம்மன் வழங்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே ராணிப்பேட்டை காவல்துறையினர் சார்பில் 2 முறை சம்மன்அனுப்பியும் ஆஜராகாத நிலையில், வரும் பிப்ரவரி 20 ஆம் தேதி ஆஜராகுமாறு 3வது முறை சம்மன் அளிக்க காவல்துறையினர் அவரது வீட்டிற்கு வருகை தந்துள்ளனர். வருகிற 20 ஆம் தேதி நேரில் ஆஜராகும் படி ராணிப்பேட்டை, ஈரோடு, கடலூர் காவல்துறையினர் சீமான் வீட்டிற்கு சம்மன் அளிக்க வந்துள்ளனர். இதனால் சீமான் கைது செய்யப்படுகிறாரா என பரபரப்பு ஏற்பட்டது.
சீமான் கருத்து
இது தொடர்பாக இன்று(17.02.2025) காலை செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், "எல்லா இடங்களிலும் வழக்கு போட்டு அலைய வைத்து மன சோர்வை ஏற்படுத்த அரசு நினைக்கிறது. இதெற்கெல்லாம் சோர்வடையும் ஆளா நான். இதற்கெல்லாம் அச்சப்படுபவர் அரசியலுக்கு வர முடியாது.
என் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் ஒரே நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்திருக்கிறேன். அதற்கிடையில், சம்மன் கொடுக்கிறார்கள். விக்கிரவாண்டியில் நாளைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் கொடுத்திருக்கிறார்கள். பின்னர் சேலத்தில் ஆஜராக வேண்டும்.
ஒரே நேரத்தில் 3 வழக்குகளுக்கு எப்படி ஆஜராக முடியும்? ஒரு ஆள் தானே இருக்கிறேன். ஏஐ தொழில்நுட்பம் மூலமாக என்னை போன்ற நான்கைந்து பேரை அனுப்ப முடியாதல்லவா? அதனால் ஒவ்வொரு வழக்குகளாக தான் ஆஜராக முடியும்" என கூறினார்.