ஒரு நாள் கூட லீவு இல்ல.. முக்கியமான விசேஷத்திற்கும் தர மறுக்கிறார்கள் - வேதனையில் வீடியோ போட்ட போலீஸ்!
காவல் அதிகாரி ஒருவர் தனது அக்காவின் மகள் திருமணத்திற்கு லீவ் தரவில்லையென்று மன உளைச்சலில் வீடியோ பதிவிட்டுள்ளார்.
போலீஸ் மனக்குமுறல்
மதுரை, செல்லூரில் உள்ள குற்றப்பிரிவு போலீசில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் ஸ்டாலின்அப்பன்ராஜ் (வயது 50). இவர் அதே காவல் நிலையத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். வருகிற 20-ந் தேதி இவரது அக்காள் மகள் திருமணம் நடக்கவுள்ளது, அதில் தாய்மாமன் என்ற முறையில் கலந்து கொள்வதற்காக இன்ஸ்பெக்டர் வேதவள்ளியிடம் லீவு கேட்டுள்ளார்.
ஆனால் அவர் தர மறுத்துள்ளார், இதனால் மன உளைச்சலில் வீடியோ பதிவிட்டு வெளியிட்டுள்ளார். மேலும், வீடியோவில் முக்கியமான நிகழ்விற்கு கூட லீவு தர மறுக்கின்றனர், மன உளைச்சலில் தற்கொலை செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம் என்று கூறியுள்ளார்.
அதிகாரிகள் பதில்
இந்நிலையில், அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. அந்த வீடியோ போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரியவந்ததால் உடனே அவரை அழைத்து விசாரித்து விடுமுறை வழங்கினார்கள். பின்னர் அவர் மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் "மனஉளைச்சலில் இது போன்று வீடியோவை வெளியிட்டேன். அதிகாரிகள் எனக்கு உடனே விடுமுறை வழங்கி விட்டனர்.
எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள்" என்று பேசியிருந்தார். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, "வருகிற 16-ந் முதல் 18-ந் தேதி வரை முதல்-அமைச்சர் மதுரை, ராமநாதபுரத்திற்கு வருகிறார்.
20-ந் தேதி மதுரையில் அ.தி.மு.க. மாநாடு நடக்கிறது என்பதால் விடுமுறை வழங்க முடியாத நிலை இருந்தது. பின்னர் அவரது நிலை அறிந்து அவருக்கு விடுமுறை வழங்கப்பட்டு விட்டது" என்று கூறினார்.