விசாரணை கைதி மரணம்... கோபத்தில் காவல் நிலையத்தை தீ வைத்து கொளுத்திய மக்கள்...
அசாமில் விசாரணை கைதி மரணம் அடைந்த ஆத்திரத்தில் காவல் நிலையம் தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலம் நகோவான் பகுதியில் உள்ள பதாத்ரபா காவல்நிலையத்தில் கடந்த மே 20 ஆம் தேதி சபிகுல் இஸ்லாம் என்ற மீன் வியாபாரி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டார். அந்த நபர் காவல்துறை விசாரணையின் போது உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவரின் உறவினர்களும், அப்பகுதி மக்களும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தீ வைத்தனர்.
இதையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மேலும் இந்த குற்றத்தில் ஈடுபட்ட ஐந்து குடும்பங்களின் வீடுகளை நகோவான் மாவட்ட நிர்வாகம் புல்டோசர் கொண்டு இடித்துள்ளது. மேலும் கைதி மரண விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தின் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 20 பேரை காவல்துறை கைது செய்துள்ளனர். இதனால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.