பணியின் போது செல்போன் பயன்படுத்த கூடாது - போலீசாருக்கு காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி உத்தரவு..!

Chennai Tamil Nadu Police
By Thahir Jul 04, 2023 07:34 AM GMT
Report

பணி நேரத்தில் இருக்கும் போலீசார் செல்போன் பயன்படுத்தக் கூடாது என சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.

பல முக்கிய பணிகளில் தொய்வு

இதுகுறித்து காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் சுற்றறிக்கையில், " பாதுகாப்புப் பணி மற்றும் சாலைகளில் போக்குவரத்துப் பணியிலிருக்கும் காவலர்கள் பணி நேரத்தில் செல்போனைப் பயன்படுத்துவதால், அவர்களால் பணியை சரியாக செய்ய முடியாதபடி கவனச் சிதறல் ஏற்படுகிறது. இக்கவனச் சிதறலால், பல முக்கியப் பணிகளில் தொய்வு ஏற்படுகிறது.

Police should not use cell phones during duty hour

குறிப்பாக சட்டம் ஒழுங்கு, பாதுகாப்புப் பணி, முக்கியப் பிரமுகர்கள் பாதுகாப்புப் பணி, கோயில் மற்றும் திருவிழாக்கள் பாதுகாப்புப் பணிகளின்போது கண்டிப்பாக செல்போனை பயன்படுத்தக் கூடாது என்பதை பணியை நியமிக்கும்போதும், பணியைப் பற்றி விவரிக்கும்போதும் காவல் ஆளிநர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

செல்போனை பயன்படுத்தக் கூடாது

மேலும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்தல் போன்ற மிக முக்கியமான பணிகளில் ஈடுபடும் காவலர்கள் தொடர்ந்து விழிப்புடன் இருந்து போக்குவரத்தை சரிசெய்வதும், போக்குவரத்து விதிமீறல்களை உடனுக்குடன் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதும் மிக முக்கியமானது.

எனவே இச்சமயங்களில், செல்போனை பயன்படுத்துவது காவல் ஆளிநர்களின் கவனத்தை திசை திருப்புகிறது. எனவே, போக்குவரத்தை சரிசெய்தல் மற்றும் விதிமீறல்களைக் கண்டறிதலில் தொய்வு ஏற்படும் என்பதை உணர்ந்து காவலர்கள் பணி நேரங்களில் கண்டிப்பாக செல்போனை பயன்படுத்தக் கூடாது.

மிக மிக முக்கிய நபர்களின் பாதுகாப்பு, முக்கியப் போராட்டங்கள் இவ்வாறான முக்கியப் பணிகளின்போது, காவல் உதவி ஆய்வாளர்களுக்கு கீழ் உள்ள ஆளிநர்கள் செல்போனை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.

எனவே, அனைத்து கூடுதல் காவல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் ஆகியோர் அவரவர்களின் கீழ் பணிபுரியும் காவல் ஆளிநர்கள் இந்த அறிவுறுத்தல்களை எந்தவித சுணக்கமும் இன்றி மிக கண்டிப்புடன் கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும், இதை அனைத்து காவல் நிலைய தகவல் பலகைகளிலும் ஒட்டியும், தினமும் காலை ஆஜர் அணிவகுப்பின்போது இதை படித்துக் காட்டியும், இந்த அறிவுரையைக் கண்டிப்பாக பின்பற்ற வலியுறுத்த வேண்டும்' என்று அறிவுறுத்தியுள்ளார். இதே கருத்தை வலியுறுத்தி தமிழக காவல் துறை தலைவர் சார்பிலும் தனி சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.