தமிழகத்தில் தலைதூக்கும் குட்கா - ரூ.3 லட்சம் மதிப்புள்ள குட்காவை பறிமுதல் செய்த போலீஸ்

வாணியம்பாடியில் வீட்டில் பதுக்கி வைக்கபட்டிருந்த ரூ. 3 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர் பகுதியில் ஒரு வீட்டில் குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்களை பதுக்கி வைத்துள்ளதாக போலீசார்க்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் பேரில் கிராமிய காவல் நிலைய உதவி ஆய்வாளர் கமலக்கண்ணன் தலைமையிலான போலீசார் கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் சோதனை செய்தனர்.

அப்போது அந்த வீட்டில் அட்டை பெட்டிகளில் பதுக்கி வைத்திருந்த ஹான்ஸ், குட்கா போன்ற போதை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. வீட்டில் சோதனை நடைபெறுவதை அறிந்துகொண்ட சம்மந்தப்பட்டவர் தப்பி தலைமறைவானார்.

பதுக்கி வைத்திருந்த போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நேதாஜி நகரைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவானவரை தேடி வருகின்றனர்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்