வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் - தூக்கில் தொங்கிய இளைஞர்
தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்ததால் கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு கணபதி கோவில் தெருவை சேர்ந்த இசக்கிபாண்டி என்பவரது மகன் மாரிமுத்து கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி இரவு மதுபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார்.
அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த முறப்பநாடு போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்ததுடன் மாரிமுத்து மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அபராத தொகையை கட்டாததால் வாகனத்தை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். இதனிடையே நேற்று முன்தினம் மாரிமுத்து தனது மனைவியிடம் இருசக்கர வாகனத்தை எடுக்க அபராத தொகை கட்ட பணம் கேட்டுள்ளார்.
அதற்கு மனைவி மாரீஸ்வரி மறுக்கவே இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் விரக்தியடைந்த மாரிமுத்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்த முறப்பநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாரிமுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தற்கொலை சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் வல்லநாடு பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.