சிவகாசியில் தடையை மீறி செயல்பட்ட பட்டாசு ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல்
சிவகாசி அருகே ஊரடங்கு தடையை மீறி செயல்பட்டு வந்த 2 பட்டாசு ஆலைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். தலைமறைவான ஆலை உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த 10ம் தேதி முதல் வரும் 24ம் தேதி வரை பட்டாசு ஆலைகள் செயல்படுவதற்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவும் அமலில் உள்ளது. இந்த நிலையில் அரசு உத்தரவுகளை மீறி, ஆனையூர் மற்றும் போடுரெட்டியாபட்டி பகுதிகளில் பட்டாசு ஆலைகளில் தொழிலாளர்கள் வேலை பார்ப்பதாக சிவகாசி சார் ஆட்சியர் தினேஷ்குமாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் பட்டாசு ஆலைகளில் சோதனை நடத்துமாறு அதிகாரிகளுக்கு, சார் ஆட்சியர் உத்தரவிட்டார். சிவகாசி தாசில்தார் ராமசுப்பிரமணியன், பட்டாசு மற்றும் தீப்பெட்டி தனி தாசில்தார் லோகநாதன் தலைமையில் வருவாய்த்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சிவகாசியைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சொந்தமான ஆனையூர் ஊராட்சி தேன்காலனி பகுதியில் உள்ள நீராத்துலிங்கம் பயர் ஒர்க்ஸ், போடுரெட்டியாபட்டியில் உள்ள ஸ்ரீரங்கா பயர் ஒர்க்ஸ் என்ற இரண்டு பட்டாசு ஆலைகளிலும் விதிமுறைகள் மற்றும் ஊரடங்கு தடையை மீறி தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை உரிமம் பெற்றுள்ள இந்த இரண்டு பட்டாசு ஆலைகளும், அரசு உத்தரவை மீறி செயல்பட்டதால் இரண்டு ஆலைகளையும் பூட்டி வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மேலும் அரசு உத்தரவை மீறி ஆலையை இயக்கிய ஆலை உரிமையாளர் மீது மாரனேரி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. பல்வேறு பிரிவுகளில் வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவான ரமேஷை தேடி வருகின்றனர்.