சிவகாசி அருகே சாலை மறியல் போராட்டம்: தடுப்பு பணியில் இருந்த பெண் காவலருக்கு தலையில் காயம்
சிவகாசி விளாம்பட்டி சாலையில் சாலை மறியல் போராட்டத்தின் போது பெண் தீக்குளிக்க முயற்சி தடுக்கச் சென்ற பெண் காவலருக்கு தலையில் காயம்.
சிவகாசி அருகே உள்ள துலுக்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வேண்டுராயபுரம் கிராமத்தின் வழியாக கூலி வேலைக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர் சில தினங்களுக்கு முன்பு துலுக்கப்பட்டி கிராம ஒரு சமுதாய இளைஞர்கள் வேண்டு ராயபுரம் வழியே பணி முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வந்த போது வேண்டுராயபுரம் கிராம மற்றொரு சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் துலுக்க பட்டியை சேர்ந்த இளைஞர்கள் ஆடு கோழியை திருட வந்தவர்கள் என நினைத்து தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து துலுக்கப்பட்டி யைச் சேர்ந்தவர்கள் மல்லி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ள நிலையில் போலீசார் குற்றவாளிகளை கைது செய்வதில் மெத்தனப் போக்கை காட்டி வந்ததாக தெரிகிறது இதற்கிடையே மல்லி போலீசார் குற்றவாளிகள் சிலரை மட்டுமே கைது செய்த பட்சத்தில் இவ்வழக்கில் மேலும் தாக்கியவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி துலுக்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் நூற்றுக் கணக்கானவர்கள் திரண்டு வந்து சிவகாசியில் இருந்து விளாம்பட்டி செல்லும் சாலையில் உள்ள தேன் காலனி பேருந்து நிறுத்தத்தில் திடீரென சாலைகளில் தடைகளை ஏற்படுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் மற்றும் காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தபோது துலுக்கப்பட்டி சேர்ந்த பரமேஸ்வரி என்ற பெண் தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்ற போது அதை கண்ட கீர்த்திகா என்ற பெண் போலீஸ் தடுக்க சென்ற போது அவருக்கு தலையில் ரத்தக் காயம் ஏற்பட்டது இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி போலீசார் தடியடி நடத்த தயாரான நிலையில் மறியலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கலைந்து சென்று சாலையின் இருபுறங்களிலும் நின்றனர்.
மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட துலுக்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கூறும்போது தங்கள் கிராம இளைஞர்களை தாக்கியதோடு மட்டுமின்றி தங்கள் சமுதாயம் குறித்து வேண்டுராயபுர தைச்சார்ந்த மற்றொரு சமுதாய இளைஞர்கள் தவறான தகவல்களை வாட்ஸ்அப் பில் பதிவிட்டுள்ளதாகவும் எனவே இவ்வழக்கில் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்வதோடு மட்டுமின்றி தங்களது சமுதாயம் குறித்து தவறாக வாட்ஸ் அப்பில் பதிவிட்டவர்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இல்லையென்றால் தங்களது போராட்டம் மென்மேலும் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர் இதன் காரணமாக சிவகாசியிலிருந்து விளாம்பட்டி செல்லும் சாலையில் மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு ஏராளமான போலீஸ் வாகனங்களை நிறுத்தி வைத்து நூற்றுக்கணக்கான ஆண் பெண் போலீசார்கள் தொடர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.