சூர்யாவுக்கு செக் வைக்கும் பாமக - எதற்கும் துணிந்தவன் படம் வெளியாவதில் தொடரும் சிக்கல்
எதற்கும் துணிந்தவன் பட விவகாரத்தில் நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகை பிரியங்கா மோகன், நடிகர் சத்யராஜ், வினய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள நிலையில் படம் நாளை தியேட்டர்களில் வெளியாகிறது.
இதனிடையே நடிகர் சூர்யா நடித்து கடந்த ஆண்டு வெளியான ஜெய்பீம் திரைப்படம் வன்னியர்களுக்கு எதிராக உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், நடிகர் சூர்யா இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களுக்கு ஜெய்பீம் படத்தை கொண்டு சேர்த்து படத்துக்கு புகழ் கிடைத்தது என்றே சொல்லலாம்.
இந்நிலையில் வன்னியர் மக்களிடம் பொதுமன்னிப்பு கேட்கும் வரை எதற்கும் துணிந்தவன் படத்தை கடலூரில் திரையிடக்கூடாது என தியேட்டர் உரிமையாளர்களுக்கு பாமக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் பாமக சார்பில் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சூர்யா வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.