"எஸ்ஐ சொல்லித்தான் ஓட்டினேன்" - மணல் கொள்ளையனுடன் தனிப்படை போலீஸ் உரையாடல்? : ஆடியோ வைரல்

crime leakedconversation policeofficerrobber policeinvolved
By Swetha Subash Mar 30, 2022 07:35 AM GMT
Swetha Subash

Swetha Subash

in குற்றம்
Report

எஸ்.பி மற்றும் தனிப்படை காவல் அதிகாரி ஒருவர் மணல் கடத்தல் தொடர்பாக பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்ட ஆயுதப்படையில் உயர் பொறுப்பில் இருக்கும் காவல் அதிகாரி ஒருவர் அடுக்கம்பாறை பகுதியில் வீடு கட்டி வருகிறார். வீடு கட்டுவதற்கு அவருக்கு மணல் தேவை என்பதால் எஸ்.பி., தனிப்படையில் பணியாற்றி வரும் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர், அவருக்கு உதவி செய்ய முன் வந்திருக்கிறார்.

இதற்காக, கொலை வழக்கில் தொடர்புடைய பஞ்சர் மணி என்பவர் மூலம் கடந்த ஆண்டு இறுதியில் மணல் ஏற்றிச் செல்ல ஏற்பாடு நடந்துள்ளது. இந்நிலையில் மணல் கடத்தி சென்ற வாகனத்தை பாகாயம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பறிமுதல் செய்து பஞ்சர் மணி, வாகன உரிமையாளர் டெல்லிபாபு உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து வாகனத்தை விடுவிக்க பேரம் பேசியும் முடியாத நிலையில், பஞ்சர் மணி தனிப்படை காவல் அதிகாரி ஒருவரிடம் செல்போனில் பேசி வாகனத்தை விடுவிக்க வற்புறுத்தியுள்ளார். அவர் உரையாடும் ஆடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், பஞ்சர் மணி, ‘எஸ்ஐ சொல்லித்தான் மணலை ஓட்டினேன். அவர் சொன்னபடி வண்டியுடன் வந்திருந்தால் வண்டி சிக்கியிருக்காது. எப்படியாவது அந்த வண்டியை மீட்டுக் கொடுங்கள்.

என் மீது வழக்கு போட்டதை பற்றி நான் கவலைப்படவில்லை. வண்டியை மீட்க முடியாத நிலையில் உள்ளது. என் நம்பரை பார்த்தால் எஸ்ஐ ஃபோன் எடுத்து பேசுவதில்லை’’ என்று கூறுகிறார்.

இதற்கு எஸ்.பி., தனிப்படை காவல் அதிகாரி ‘எங்கள் தரப்பில் இப்போதைக்கு எதுவும் செய்ய முடியாது. பார்த்து அட்ஜெஸ்ட் செய்துகொள்’ என்று கூறுகிறார்.

இதேபோல் மற்றொரு ஆடியோவில் வீடு கட்டிவரும் காவலர், பஞ்சர் மணியிடம் பேசும்போது, ‘‘நாளைக்கு 10 ஆயிரம் கொடுக்கிறேன். இப்போதைக்கு இதுதான் செய்ய முடியும்’’ என்கிறார்.

தற்போது இந்த ஆடியோ தான் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.