பறிமுதல் செய்த மதுபான பாட்டில்களை விற்றதாக இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்

Trichy Seized liquor
By Petchi Avudaiappan Jun 08, 2021 10:06 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

 தஞ்சையில் பறிமுதல் செய்த மதுபான பாட்டில்களை விற்றதாக இன்ஸ்பெக்டர் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முழு ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் சட்ட விரோதமாக மதுபானம் விற்கப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தினர் அப்பகுதியில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்து விற்கப்பட்ட 434 மதுபான பாட்டில்களை கடந்த மே 8 ஆம் தேதி பறிமுதல் செய்தனர்.

இதை முறையாக வழக்குப்பதிவு செய்யாமல் தொடர்புடைய நபரை கைது செய்வதை விடுத்து எச்சரிக்கை செய்து அனுப்பியதோடு பறிமுதல் செய்யப்பட்ட மதுபான பாட்டில்களை காவல் நிலையத்தினர் வேறொரு நபரிடம் விற்றுவிட்டதாக புகார்கள் எழுந்தன.

இதுதொடர்பாக தஞ்சாவூர் சரக காவல் துணைத் தலைவரின் உத்தரவின் பேரில் பட்டுக்கோட்டை துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேசன் விசாரணை மேற்கொண்டார். சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் காவல் துணைத் தலைவரிடம், துணை கண்காணிப்பாளர் அறிக்கை அளித்தார்.

இதையடுத்து திருச்சிற்றம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் அனிதா கிரேசி, உதவி ஆய்வாளர் ராஜ்மோகன், சிறப்பு உதவி ஆய்வாளர் துரையரசன், தலைமை காவலர் ராமமூர்த்தி ஆகியோரை தஞ்சாவூர் சரக காவல் துணைத் தலைவர் பிரவேஷ் குமார் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.