காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பாராட்டு
கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் மயங்கிக் கிடந்த இளைஞரைத் தோளில் சுமந்து ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பாராட்டியுள்ளார்.
பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியை, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நேரில் அழைத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வாழ்த்தினார்.
மேலும், வாழ்த்து மடல் ஒன்றையும் வழங்கி பாராட்டினார். அந்த வாழ்த்து மடலில், ''மன்னுயிர் ஓம்பி அருள்வார்க்கு இல்லென்ப தன்னுயிர் அஞ்சும் வினை.
நன்றிகளும் பாராட்டுகளும் உயிர் காக்க உதவாது என்பதனை நன்கு உணர்வேன். பேரிடர்க் காலங்களில் சுயநலம் பாராது உயிர்களைக் காக்கும் அறப்பணி செய்யும் தங்களைப் போன்ற காவல் துறையினர் வள்ளுவம் உயர்படப் பேசும் செல்வத்துள் செல்வமான அருட்செல்வத்தின் உடைமையாளர்கள்.
'என்பும் உரியர் பிறர்க்கு' எனும் உயர் பண்போடு தாங்கள் ஆற்றிய அரும்பணிக்கு என் பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அச்சமும் துயருமென்றே - இரண்டு அசுரர்வந் தெமையிங்கு சூழ்ந்துநின்றார்; துச்சமிங் கிவர்படைகள் - பல தொல்லைகள் கவலைகள் சாவுகளாம், இச்சையுற் றிவரடைந்தார் -எங்கள் இன்னமு தைக்கவர்ந் தேகிடவே, பிச்சையிங் கெமக்களித்தாய் - ஒரு பெருநகர் உடலெனும் பெயரினதாம். ..... மும்மையின் உடைமைகளும் - திரு முன்னரிட் டஞ்சலி செய்து நிற்போம், அம்மைநற் சிவசக்தி - எமை அமரர்தம் நிலையினில் ஆக்கிடுவாய்' என்றார் பாரதி.
காணொலியில் ''ஓடு! ஓடு! ஓடு! உயிரைக் காப்பாற்றிடணும் எப்படியாவது... சரியா!'' என்று தாங்கள் விடுத்த அன்பான அறிவுறுத்தல் அன்பு கனிந்த கனிவே சக்தி என்பதை உறுதிப்படுத்தியது.
வளரட்டும் உங்கள் அறப்பணி. நீதித்துறையின் வாழ்த்துகள்''.
இவ்வாறு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பாரட்டியுள்ளார்.