முன்களப் பணியாளர்களுக்கு பாத பூஜை செய்த காவல் ஆய்வாளர்..! மீனவர் வேடத்தில் கொரோனா விழிப்புணர்வு..!
நாகையில் கொரோனா தொற்று பரவும் இக்கட்டான சூழ்நிலையில், உயிரைப் பணயம் வைத்து பொதுமக்களுக்காக போராடிவரும் முன்களப் பணியாளர்களுக்கு காவல் ஆய்வாளர் பாதபூஜை செய்து கௌரவித்திருக்கும் சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நாகை அக்கரைப்பேட்டை கிராமத்தில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் நாகை நகரக் காவல் நிலைய ஆய்வாளர் பெரியசாமி, மீனவர் போல் வேடம் அணிந்து பொது மக்கள் மத்தியில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து நோய்த் தொற்று பரவும் இக்கட்டான சூழ்நிலையில் தங்களின் உயிரைப் பணயம் வைத்து பொதுமக்களுக்காகப் போராடிவரும் முன் களப்பணியாளர்களான மருத்துவர், போலீஸ், துப்புரவுப் பணியாளர் ஆகியோரை வரிசையாக அமரவைத்து கவுரவிக்கும் விதமாக காவல் ஆய்வாளர் பெரியசாமி பாதபூஜை செய்தார். இந்த சம்பவம் காண்போரை கண்கலங்க செய்தது.