பெற்ற தாயின் உடலை வாங்க மறுத்த பிள்ளைகள் - இறுதி சடங்கு செய்த காவல் ஆய்வாளர்!
இறந்த தாயின் உடலை பிள்ளைகளே வாங்க மறுத்த நிலையில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் இறுதிச்சடங்கு செய்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மூதாட்டி உயிரிழப்பு
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமிளியை சேர்ந்தவர் அன்னக்குட்டி (77). இவருக்கு ஷாஜி என்ற மகனும், ஷிஜி என்ற மகளும் உள்ளனர்.
இவர்கள் இருவரும் சொத்துக்களை அபகரித்துவிட்டு, தாய் அன்னக்குட்டியை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர். இதனால் ஆதரவற்று வாழ்ந்து வந்த அவர், உடல்நலக்குறைவால் சாலையில் கிடந்துள்ளார். அப்போது ரோந்து பணியிலிருந்த காவல் துரையின் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் அன்னக்குட்டியில் நிலை குறித்து அவர்களின் பிள்ளைகளுக்கு காவல்துறையினர் தகவல் கொடுத்துள்ளனர். ஆனாலும் மருத்துவமனையில் இருந்த தாயை பார்க்க வராத பிள்ளைகள், அவரின் மருத்துவ செலவை கூட ஏற்க மறுத்துள்ளனர்.
நெகிழ்ச்சி சம்பவம்
இதனிடையே சிகிச்சை பலனின்றி அன்னக்குட்டி உயிரிழந்துள்ளார். தாய் இறந்தது குறித்து பிள்ளைகளுக்கு தெரிவித்தும், அவரின் உடலை பெற்றுக்கொள்ள முன்வரவில்லை.
இதனால் மனவேதனை அடைந்த காவல் உதவி ஆய்வாளர் மணி என்பவர், மூதாட்டியின் உடலை தானே அடக்கம் செய்ய முடிவெடுத்தார். பின்னர் அவரின் உடல் குமிளிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரின் உடலுக்கு பொதுமக்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
தகவலறிந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளும் இறுதிச்சடங்கில் பங்கேற்றனர். காவல் உதவி ஆய்வாளர் மணி தனது சொந்த தாயைப்போல நினைத்து மூதாட்டியின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்தார். இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.