இலங்கையில் வெடித்த வன்முறை : 5 மணி நேரமாக மகிந்த ராஜபக்சவிடம் போலீசார் தீவிர விசாரணை!
இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
இலங்கையில் மக்களின் கடுமையான போராட்டத்தை தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகினார்.
இதனையடுத்து மகிந்த ராஜபக்ச ஆதரவு அரசியல்வாதிகளை டார்கெட் செய்து பொதுமக்கள் தாக்க தொடங்கினர். அரசுக்கு எதிரான இந்த போராட்டம் வன்முறையாக மாறி 100-க்கும் அதிகமான ராஜபக்சே ஆதரவாளர்கள் வீடுகள் தீ வைக்கப்பட்டன.
அதைத்தொடர்ந்து குருநாகல்லில் உள்ள மகிந்த ராஜபக்சேவின் வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இந்த காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. அதேபோல் ராஜபக்சேவின் மருமகள் ஹெலிகாப்டரில் குடும்பத்தினருடன் தப்பியோடும் காட்சிகளும் வெளியாகியிருந்தது.
இதனையடுத்து மகிந்த ராஜபக்ச கொழும்பை விட்டு தப்பி ஓடி திருகோணமலை கடற்படை முகாமில் தஞ்சமடைந்த நிலையில் தற்போது அவர் அங்கிருந்து வெளியேறியதாக தகவல் வெளியானது.
அதன்படி, திருகோணமலை கடற்படை முகாமில் இருந்து வெளியேறியுள்ள முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச கொழும்புவுக்கு அருகில் மறைவிடம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
கடந்த மே மாதம் 9-ம் திகதி காலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு அருகில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பாக கொழும்புவில் உள்ள மகிந்த ராஜபக்சவின் வீட்டில் வைத்து அவரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார் 5 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.