கஞ்சா விற்பனை குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தவர் கொடூரமாக வெட்டிக் கொலை
திருவள்ளூர் அருகே கஞ்சா விற்பனை குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்த தனியார் நிறுவன ஊழியர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கிராமத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் குமாரஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் புகழேந்தி அவரது மகன் காமேஷ். இவருக்கு திருமணமாகி பாரதி என்கிற மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்த காமேஷ் ஊரடங்கு காரணமாக தனியார் நிறுவனங்களில் 50 சதவீத ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் கடந்த சில தினங்களாக நிறுவனத்திற்கு வேலைக்கு செல்லாமல் தனது குமாரஞ்சேரி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வந்ததாக தெரிகிறது.
மேலும் சம்பவத்தன்று தனது நிலத்தில் நெற்பயிர் நட்டுவிட்டு மாலையில் வீடு திரும்பிய காமேஷ் குளிப்பதற்காக தனது மனைவியிடம் சுடு தண்ணீர் போட்டு வைக்கும்படியும் சற்று நேரத்தில் திரும்பி வருவதாகவும் கூறிச் சென்றவர் நீண்ட நேரத்திற்குப் பிறகும் வீடு திரும்பவில்லை.
மேலும் குமரஞ்சேரியிலிருந்து இருளஞ்சேரி செல்லும் வழி பாதையில் ஒருவர் தலையில் படுகாயமடைந்து மயங்கி கிடப்பதாக கிராமத்தினருக்கு தெரியவர சென்று பார்த்தபோது தலையில் முகங்கள் தெரியாத அளவிற்கு படுகாயங்களுடன் காமேஷ் இறந்து கிடந்ததைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
சம்பவம் குறித்து மப்பேடு காவல்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் காவல்துறையினர் விரைந்து வந்து இறந்த காமேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மப்பேடு காவல் ஆய்வாளர் கண்ணையா தலைமையில் உதவி ஆய்வாளர் சுரேஷ் உள்ளிட்டோர் காமேஷின் கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் காமேஷ் கொலை குறித்து கிராமத்தினர் கூறுகையில் வீட்டில், ”சுடுதண்ணீர் போட சொல்லிவிட்டு இயற்கை உபாதை கழிக்க சென்றவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்தோம். கடந்த 8 மாதத்திற்கு முன்பு எங்கள் பகுதியில் இருளஞ்சேரி பகுதியில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.
கஞ்சா விற்ற மகாலிங்கம் மற்றும் அவரது மகன் கமலக்கண்ணனை காவல்துறையினர் தேடி வந்தனர். அதன் அடிப்படையில் கஞ்சா விற்ற மகாலிங்கத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
பின்னர் சில நாட்கள் சிறையில் இருந்த மகாலிங்கம் சிறையிலிருந்து வெளியே வந்தார்.
ஆனால் கஞ்சா விற்பனையில் முக்கிய குற்றவாளியான கமலக்கண்ணன் தலைமறைவாக இருந்து வந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு குமரஞ்சேரி கிராமத்திற்கு வந்துள்ளார்.
இதுகுறித்து காவல்துறைக்கு அளிக்கப்பட்ட ரகசிய தகவலின் அடிப்படையில் மப்பேடு காவல் நிலைய போலீசார் குமராஞ்சேரி கிராமத்திற்கு வந்து பார்த்த பொழுது கமலக்கண்ணன் மீண்டும் தலைமறைவாகி விட்டதால் அவரது வாகனத்தை மட்டும் பறிமுதல் செய்து எடுத்து சென்றனர்.
இதனால் கோபமடைந்த கமலக்கண்ணன் காமேஷ் கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே காவல்துறை தன்னை கைது செய்ய தேடி வருவதாக எண்ணி அவரை கொலை செய்ய திட்டமிட்டு நோட்டமிட்டு வந்துள்ளதாகவும் சரியான நேரம் பார்த்து சுமார் 6 பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனத்தில் வந்து காமேஷை முகத்தில் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு சென்றுள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும் கமலக்கண்ணனை உடனே கைது செய்ய வேண்டும் எனவும் காவல்துறை கைது செய்ய தாமதப்படுத்தும் பட்சத்தில் கிராமத்தில் மேலும் பல உயிர்களை இழக்க நேரிடும் எனவும் வேதனை தெரிவித்தனர்