இடம் தர முடியாது : மல்யுத்த வீரர்களுக்கு அனுமதி மறுத்த டெல்லி காவல்துறை
டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் போராட காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
டெல்லியில் போராட்டம்
டெல்லியில் கடந்த சில வாரங்களாக ஜந்தர் மந்தர் பகுதியில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், மல்யுத்த சம்மேளன தலைவர் பிரித் பூஷன் சிங் மீது பாலியல் குற்றசாட்டுகளை முன்வைத்து அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள வீரர் வீராங்கனைகள் கூறி வருகின்றனர்.
அனுமதி மறுப்பு
பிரித் பூஷன் சிங் மீது தற்போதுவரை காவல்துறையினர் வழக்குப்பதிவு நடவடிக்கை மட்டுமே எடுத்துள்ளனர். இதனால் நேற்று, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வீரர், வீராங்கனைகள் புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர்.
அவர்களை காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் தடுத்து கைது செய்து மாலையில் விடுவித்தனர். நேற்று கைது நடவடிக்கையை தொடர்ந்து ஜந்தர் மந்தரில் போராட்டக்காரர்கள் அமைத்திருந்த குடில், படுக்கை ஆகியவை அகற்றப்பட்டன. பின்னர் நேற்று போலீசார் பலத்த பாதுகாப்புடன் அங்கு குவிக்கப்பட்டனர்.
காவல்துறை தகவல்
நேற்று மாலை கைது செய்யப்பட்ட வீரர்கள் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து மீண்டும் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டக்காரர்களுக்கு போராடுவதற்கு அனுமதியை காவல்துறையினர் மறுத்துள்ளனர்.
கடந்த 38 நாட்களாக ஜந்தர் மாந்தர் பகுதியில் தகுந்த பாதுகாப்போடு வீரர்களை போராட அனுமதித்ததாகவும், நேற்று கட்டுப்பாடுகளை போராட்டக்காரர்கள் மீறிவிட்ட காரணத்தால் வேறு இடத்தில் அவர்கள் போராட அனுமதிக்கப்படுவர் எனவும் டெல்லி காவல்துறை துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
மேலும், அப்பகுதிக்கு மீண்டும் மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் வருவதை தடுக்க காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் , மீண்டும் போராட ஜந்தர் மந்தர் பகுதி தரப்பட மாட்டாது என்றும், தெரிவித்துள்ளனர்.