கணவன் மனைவி சண்டை - விலக்க சென்ற காவலருக்கு நேர்ந்த கதி
கணவன் மனைவியிடையேயான தகராற்றை விலக்க சென்ற காவலருக்கு வெட்டு விழுந்துள்ளது.
கணவன் மனைவி தகராறு
மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணி காவல் நிலையத்தில் துணை ஆய்வாளராக பணியாற்றுபவர் நத்தர் ஒலி. இவர் நேற்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, உத்தங்குடி பாண்டியன் தெருவில் கணவன் - மனைவிக்கு இடையில் தகராறு நடப்பதாக காவலர் நத்தர் ஒலிக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து காவலர் நத்தர் ஒலி சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு தங்கையா(35) என்பவர் தன் மனைவியுடன் தகராற்றில் ஈடுபட்டுள்ளார். அவருடன்நடத்திய விசாரணையில் , பிரிந்து வாழும் தனது மனைவியை சேர்த்து வைக்குமாறு கூறியுள்ளார்.
அரிவாள் வெட்டு
இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு எஸ்ஐ நத்தர் ஒலி அறிவுறுத்தியுள்ளார். அவர் சொல்லியதை பொருட்படுத்தாத தங்கையா, வீட்டில் இருந்த அவரது தாயாரை அரிவாளால் வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது. இதை எஸ்ஐ நத்தர் ஒலி தடுக்க முயன்ற போது அவரின் உள்ளங்கையில் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து காயமடைந்த நத்தர் ஒலி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக மாட்டுத்தாவணி காவல்துறையினர் தங்கையாவை கைது செய்துள்ளனர்.