நா ரெடி தான் வரவா..! 'லியோ' படத்தின் வெற்றி விழாவுக்கு கடும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி!
லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவுக்கு கடும் கட்டுப்பாடுகளுடன் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
வெற்றி விழா
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த திரைப்படம் லியோ. இந்த படத்தில் சஞ்சய் தத், த்ரிஷா, அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலி கான் மற்றும் பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அனிருத் படத்திற்கு இசையமைத்துள்ளார். பல சர்ச்சைகளையும், சிக்கல்களையும் சந்தித்து கடந்த 19ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியானது. வெளியானதிலிருந்து ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆனால் வசூல் ரீதியாக படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. வெளியான முதல் வாரத்தில் உலக அளவில் ரூ.461 கோடிக்கும் மேல் வசூலை குவித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் தமிழ் சினிமா வரலாற்றில், முதல் வாரத்தில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை ‘லியோ’ படைத்துள்ளது. இந்நிலையில் லியோ படத்தின் வெற்றிவிழா வரும் நவம்பர் 1ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. இதில் முக்கியமாக நடிகர் விஜய்யும் கலந்து கொள்கிறார். எனவே இந்த விழாவிற்கு பாதுகாப்பு கோரி படத் தயாரிப்பாளர் காவல்துறைக்கு கடிதம் அளித்திருந்தார்.
நிபந்தனைகளுடன் அனுமதி
இதனையடுத்து படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு வெற்றி விழா கொண்டாட்டம் தொடர்பான விவரங்களைக்கேட்டு காவல்துறை கடிதம் அனுப்பியிருந்தது. அதில் "விழாவின் தொடக்க நேரம் மற்றும் முடிவடையும் நேரம், பங்கேற்கும் முக்கிய நபர்களின் விவரங்கள், ரசிகர்களுக்கு எவ்வளவு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளது, தனியார் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா? போன்ற விவரங்கள் கேட்கப்பட்டிருந்தது.
மேலும், விழாவில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கு மேல் இருக்கக்கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவுக்கு காவல்துறை பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால் 200 - 300 கார்களுக்கு மட்டுமே உள்ளே வர அனுமதித்தும், பேருந்துகளில் வர அனுமதி மறுக்கப்பட்டு, அனுமதித்த எண்ணிக்கையின் அடிப்படையிலே டிக்கெட்டுகளை விற்பனை செய்ய வேண்டும் என பல்வேறு நிபந்தனைகளை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் நிகழ்ச்சியை குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவல் துறை சார்பில் இன்று மாலை தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விழா நடைபெறும் இடம் விளையாட்டு மேம்பாட்டு மையத்திற்கு சொந்தமானது என்பதால் தடையில்லா சான்றிதழ் மட்டும் போதுமானது.