கோவையில் 3 இடங்களில் காவல் துறையினர் கொடி அணிவகுப்பு!
கோவை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளில் பொதுமக்கள் பயமின்றி வாக்களிக்க விதமாக இன்று 3 இடங்களில் காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதனையடுத்து, கோவை மாநகரில் வாழும் பொதுமக்கள் அனைவரும் பயமின்றி வாக்களிக்கவும், அமைதியாக வாக்குப்பதிவு நடைபெறவும் இன்று காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது.
இந்த மாநகர காவல்துறையினரின் இந்த கொடி அணிவகுப்பில், எல்லை பாதுகாப்பு படையினர், துணை ராணுவத்தினர், மாநகர காவல் துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஆயுதங்கள் ஏந்தி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, மக்களிடையே வழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

இந்த அணிவகுப்பு கோவை வின்சென்ட் ரோடு பகுதியிலிருந்து பெரியகடை வீதி, டவுன்ஹால், உக்கடம் காவல் நிலையம் வரையிலும், மரக்கடை, ஆர்.ஜி.வீதி, டி.பி.சாலை வழியாக ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் வரையும் நடைபெற்றது. மற்றொரு அணிவகுப்பானது கோவை டாட்டாபேண்ட் பவர் ஹவுஸ் பகுதியில் தொடங்கி சிவானந்தா காலனி வழியாக ரத்தினபுரிக்கு சென்று நிறைவடைந்தது.