பைக், காரில் நம்பர் பிளேட் சரியாக இல்லாத வாகனங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து - அதிர்ச்சி தகவல்
சென்னையில் விதிகளை மீறி நம்பர் பிளேட் அமைத்திருந்த பைக், கார் உரிமையாளர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாநகரில் விபத்துக்களை குறைப்பதற்கும், சீரான போக்குவரத்தை உறுதி செய்யவும் சென்னை காவல் ஆணையர் உத்தரவின் பேரில் சென்னை போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன்படி போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது சிசிடிவி கேமராக்களின் துணையுடனும், நேரடி தொடர்பில்லாத முறையிலும் வழக்குகள் பதிவு செய்தும் வருகின்றனர்.
அந்த வகையில் பெரும்பாலான வாகனங்களில் குறிப்பாக இரண்டு சக்கர வாகனங்களில் பதிவு எண் தகடு விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய வாகனங்கள் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டாலும், விபத்துக்கள் ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றாலும் அவற்றை கண்டறிவதில் சிரமம் ஏற்படுகிறது.
எனவே பிழையான பதிவு தகடு கொண்டுள்ள வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், சாலையோரங்களில் அனுமதிக்கப்படாத இடங்களில் வாகனங்களை நிறுத்துவதை கட்டுப்படுத்தவும் சென்னை போக்குவரத்து காவல் துறையினர் மார்ச் 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் 73 இடங்களில் சிறப்பு தணிக்கை மேற்கொண்டனர்.
இதில் பிழையான நம்பர் பிளேட் கொண்ட 2,306 வாகனங்கள் மீதும், அனுமதிக்கப்படாத இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 826 வாகனங்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களில் விதிகளின்படி நம்பர் பிளேட் வைக்க வேண்டும் என கூறியுள்ளனர்.