செங்கிப்பட்டி காவல்நிலையத்தில் உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை
செங்கிப்பட்டி காவல்நிலையத்தில் வைத்து உதயநிதி ஸ்டாலினிடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
செங்கிப்பட்டியில் உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை
தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், நடிகை திரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசியதாக உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

முன்ஜாமீன் வழக்கில், உதயநிதி ஸ்டாலினை விசாரணைக்குப் பின் இன்றே விடுவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
விசாரணைக்காக உதயநிதி ஸ்டாலினை காவல்துறையினர் தஞ்சாவூர் அழைத்து சென்றனர். இந்த கைதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் அழைத்து வரப்படுவதாக இருந்த தஞ்சாவூர் தெற்கு காவல்நிலையத்தை சுற்றி 1000க்கும் மேற்பட்ட திமுகவினர் குவிந்த வண்ணம் இருந்தனர். ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு 5 மாவட்ட எஸ்.பிக்கள் வரவழைக்கப்பட்டனர்.

ஆனால், அங்கு கொண்ட செல்லப்படுவதற்கு பதிலாக செங்கிப்பட்டி காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டதால் சுமார் 20 நிமிடங்களுக்கு காவல் வாகனத்தில் இருந்து இறங்க மறுத்தார் உதயநிதி ஸ்டாலின்.
இதனையடுத்து செங்கிப்பட்டி காவல்நிலையம் முன்பும் ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்துள்ள நிலையில், வாகனத்தில் இருந்து இறங்கிய உதயநிதி ஸ்டாலின் காவல்நிலையத்தின் உள்ளே சென்றுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் வைத்து உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.