விருதுநகரில் வீட்டை உடைத்து 60 பவுன் தங்க நகைகள் கொள்ளை! போலீசார் தீவிர விசாரணை!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஆலங்குளம் கிராமத்தில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து உள்ளே நுழைந்து 60 பவுன் தங்க நகை மற்றும் ரொக்கம் ரூ.60,000- கொள்ளையடித்து சென்று விட்டனர். இது தொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஆலங்குளம் கிராமம் உள்ளது. இப்பகுதியில் தமிழ்நாடு சிமெண்ட் ஆலை உள்ளதால் இப்பகுதி அதிகமாக மக்கள் தொகை வசிக்கும் பகுதியாகும்.
இங்கு உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே கலைஞர் நகரில் மாரியம்மாள் (80) என்பவர் குடியிருந்து வருகிறார். இவரது கணவர் குருசாமி தேவர் 10 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டதால் அருகில் மகள்கள் வசித்து வருவதால் மாரியம்மாள் தனியாக வசித்து வந்தார்.
கடந்த 27ஆம் தேதி கான்சாபுரம் கிராமத்திற்கு திருவிழாவிற்காக குடும்பத்தினர் அனைவரும் சென்றுவிட்டனர். இன்று அதிகாலை யாரோ மர்மநபர்கள் வீட்டின் கதவை கடப்பாறையால் உடைத்து நொறுக்கி, உள்ளே நுழைந்து இரும்பு பீரோவில் இருந்த 60 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 60,000 ரொக்கம் போன்றவைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
மேலும் அருகிலுள்ள குமாரசாமி என்பவரது வீட்டையும் பூட்டை உடைக்க முயற்சித்துள்ளனர். அதற்குள் விளக்கை போட்டு ஆட்கள் விழித்துக் கொண்டதால் கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இன்று காலை ஆலங்குளம் வந்த காளியம்மாள் வீட்டை பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே பீரோ உடைக்கப்பட்டு நகைகள் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்தது. உடனடியாக ஆலங்குளம் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் பாலாஜி சாத்தூர் டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் உள்பட குற்றப்பிரிவு போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
மேலும் கைவிரல் ரேகை நிபுணர்களும், போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.