பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தவாக எதிர்ப்பு - போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு
பிக்பாஸ் நிகழ்ச்சியை எதிர்த்து தவாக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ள நிலையில், பிக்பாஸ் தளத்திற்கு வெளியே காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
பிக் பாஸ் 9 வது சீசன்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9 வது சீசன், பூந்தமல்லி அருகே உள்ள செம்பரம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள வேல்ஸ் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்டு வருகிறது.

விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி, தொடர்ந்து பார்வையாளர்களிடம் வரவேற்பை பெற்றுவருகிறது.
இந்நிலையில், 9வது பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியை தடை செய்யக்கோரி, தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

தவாக எதிர்ப்பு
இந்த மனுவில், "பிக்பாஸ் நிகழ்ச்சி இளம் தலைமுறையினரை தவறானப் பாதைக்கு இட்டுச் செல்வதுடன், தமிழர் தொன்மைக்கும், குடும்ப நல்லிணக்கத்திற்கும், சமூக ஒழுக்கத்திற்கும் கடுமையானப் பண்பாட்டு அச்சுறுத்தலாக விளங்குகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று மாலை பிக்பாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு வெளியே தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, தற்போது அந்த பகுதியில் 100க்கும் அதிகமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.